Friday, January 11, 2013

மொழி
ஆற்றல் அறிவு அத்தனையும்
அடங்கியு ள்ள தமிழ் மொழியில்
போற்றிப் புகழ்ந்திட ஒரு பாட்டு
போதுமய்யா தமிழ்மெட்டில்!
கூற்றுத் தமிழ்ப்பாட்டுக்கூடக்
கோடிகணக்கில் மறைஞ்சுபோச்சு!
ஆற்றுவெள்ளம் கரைபுரள
அணைகள் கட்டி தடுத்துவிட்டோம் !
இடைச் செருகல் எத்தனையோ
எங்கள் தமிழில் புகுந்ததினால்
நடைமுறையில் வழங்கும் பேச்சு
நாளுக்கு நாள் மறையுதய்யா !
எத்தனையோ தமிழ்பாக்கள்
ஏட்டிலிருந்தும் மறைஞ்சு போச்சு !
மொத்தமாக மறையுமுன் பெரு
முயற்சியில் சில கிடைக்கலாச்சு !
உன்மொழி உனக்கு உயர்வானதே
ஊருக்காக நடனமாடாதே
தன்வழியில் தவறாமல் இரு அதில்
தரம் கெட்டுப்போய் விடாதே !
வேற்றுமொழிப் பாட்டைக்கூட
விருப்பமுடன் கேட்கவேண்டாம் !!!!!
காற்றில் மிதக்கும் தமிழ்ப்பாட்டை
காது கொடுத்துக் கேட்கவேண்டும் !
வேற்றுமொழி பாட்டைக் கேட்டு
மற்றவரைப் பொருள் கேட்போம்
ஏற்றுக்கொண்ட தமிழ்ப்பாட்டை
எந்நாளும் மதிப்பதில்லை !
துக்கடா தமிழ்ப்பாட்டு என்று
தொலைவில் அதை வைத்து விட்டோம்
மக்களும் மறுத்துப் பேசி
மற்றவர்க்கும் சொல்லவில்லை !!

Wednesday, December 26, 2012

ஊர்

பச்சைப்புல் நிலப்பரப்புடன்
பசுமைகொண்டு வளர்ந்த ஊர்
இச்சை கொள்ளும் எழில் அழகுடன்
எங்கும் குளுமை எதிலும் புதுமை !

குலப்பிரிவுகள் கொண்டிருந்தாலும்
குறைவற்ற செல்வதோடு எங்கும்
நிலபுலன்கள் யாவும் நிறைய பெற்று
நேர்மையுடன் வாழும்மூர் !

புஞ்சை காணாத தஞ்சை மண்ணில்
புடம் போட்டுப் பொன்மெரு கேற்றிஎன்
நெஞ்சை நிமிர்த்தி நிறை மனத்துடன்
நேர்மையாக வாழவைத்த ஊர்!

 சோழநாடு சோறுடைத்து _ அங்கு
வா ழ ஒரு வழிகிடைக்கும் நிலத்தை
ஆழ்உழுது அளவோடு பயிர் செய்தால்
பாழ் நிலத்தில் கூட பயிர்கள் வளரும்!

சலசலவென ஓடும் ஆற்றுநீர்
தரைபுரளக் கரையில் ஓர் ஆலமரம்
பலபல பறவைகள் பாடும் ஒலிகளைப்
பலநாட்கள் கேட்டாலும் பசியேயிராது!

Friday, April 15, 2011

சொந்த வாழ்க்கை?

என் அப்பாவின் அப்பா
தந்தைக்காக உழைத்து
ஓடாய்ப் போக....

என் அப்பா எனக்காகவே
தன் வாழ்நாளை
செலவிட

நான் என்
வாரிசுகளுக்காக
ஓடிக்கொண்டிருக்க....

என் மகன்
அவனுடைய அடுத்த
தலைமுறையின்
வளர்ச்சிக்காக
ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்க....

இங்கே யார்
தனக்காக வாழ
ஆரம்பிக்கிறார்?

குணம்

காற்றுக்குக் கோபம் வந்தால்
"சூறாவளி"
கடலுக்குக் கோபம் வந்தால்
"கொந்தளிப்பு"
பூமிக்குக் கோபம் வந்தால்
"பூகம்பம்"
பெண்ணே
உனக்கு மட்டும்
கோபம் வந்தால்
மவுனம் ஏன்?

Thursday, April 14, 2011

சித்திரையே மலர்ந்திடு...


* சித்திரையே மலர்ந்திடு
சித்திரமாய் மலர்ந்திடு...

* உச்சரிக்கும் போதே
உதடை இனிப்பாக்கும்
உள்ளத்தை இனிப்பாக்கும்...

* விண்புகழ் பெற்றத்
தேன் தமிழை
அகிலத்திற்கு
அடையாளம் காட்ட...
தங்கத் தமிழ் மாதங்களில்
முதல் மாதமாய்
முத்தாய்...
முத்தாய்ப்பாய்ப் பூக்கும்
சித்திரையே மலர்ந்திடு...

*வெற்றியெனும் சிகரத்தில்
முத்தமிட...
சோதனைகளை
அலட்சியமாய் உடைத்துச்
சாதனை படைக்க...
லட்சியத்தின் பாதையில்
யாத்திரை செல்லும்
வல்லவர்கள்
வாழ்வை வெல்ல...
நல்ல சூத்திரம் சொல்ல...
சித்திரையே மலர்ந்திடு...

*பாரெங்கும்
மனிதப் போர் ஓய...
பாரின் சாலையெங்கும்
மனிதநேயத் தேர் ஓட...
அகிம்சையெனும்
போதி மரத்தின் கீழ்
ஆண்டுக்கணக்காய்
அமைதி வேண்டி
அமர்ந்திருக்கும்...
எங்கள்
கவலை தவம் களைத்து
ஒற்றுமை வரமளிக்கச்
சித்திரையே மலர்ந்திடு...

*மனிதன் வாழ...
விலங்கு வாழ...
இயற்கை
செயற்கை வாழ...
கட்டணமற்ற
தன்னலமற்ற
தங்கும் விடுதி தந்த...
பூமியெனும் சத்திரமே
பூரிக்கும் அளவிற்கு
விசித்திரங்கள் புரிய
சித்திரையே மலர்ந்திடு...

*புத்தியற்றோர்
சித்தி பெற...
முத்தி பெற...

* யுகம்
யுத்தம் விடுத்து...
யுக்தி பெற
யுக்தி பெறும்
சக்தி தரச்
சித்திரையே மலர்ந்திடு...

* துன்ப இரவின்
நித்திரை சுட்டு
இன்ப ஒளி
முத்திரையிட...
சித்திரையே மலர்ந்திடு
சித்திரமாய் மலர்ந்திடு!

தலைகீழ் மாற்றங்கள்

இப்போதெல்லாம்....
இரவுகளைவிட
பகலில்தான் பயமாயிருக்கின்றது!

எதிரிகளை விட
நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள்

கடலைவிட
குளங்களே ஆழமாக உள்ளது

கோவிலை விட
உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது

ஒரிஜினலை விட
ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன

விரல்களை விட்டுவிட்டு
நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம்.

வெற்றியை கொடுத்தவனைவிட
பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்......


யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின் -
வாசம்தொடும்,
வரலாறாய் மட்டும் மிகாமலும்,
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -
மல்லிகைப் பூக்க,
ஒற்றை நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின் அசைவில் -
சுகந்தக் காற்று வீசும் -
தென்றல் பொழுதுகளுக்கிடையே
வஞ்சனையின்றி -
உயிர்கள் அனைத்தும் வாழ
யாரையும் நோகாமல் ஒரு - கனவேனும் வேண்டும்!!