Thursday, April 14, 2011

சித்திரையே மலர்ந்திடு...


* சித்திரையே மலர்ந்திடு
சித்திரமாய் மலர்ந்திடு...

* உச்சரிக்கும் போதே
உதடை இனிப்பாக்கும்
உள்ளத்தை இனிப்பாக்கும்...

* விண்புகழ் பெற்றத்
தேன் தமிழை
அகிலத்திற்கு
அடையாளம் காட்ட...
தங்கத் தமிழ் மாதங்களில்
முதல் மாதமாய்
முத்தாய்...
முத்தாய்ப்பாய்ப் பூக்கும்
சித்திரையே மலர்ந்திடு...

*வெற்றியெனும் சிகரத்தில்
முத்தமிட...
சோதனைகளை
அலட்சியமாய் உடைத்துச்
சாதனை படைக்க...
லட்சியத்தின் பாதையில்
யாத்திரை செல்லும்
வல்லவர்கள்
வாழ்வை வெல்ல...
நல்ல சூத்திரம் சொல்ல...
சித்திரையே மலர்ந்திடு...

*பாரெங்கும்
மனிதப் போர் ஓய...
பாரின் சாலையெங்கும்
மனிதநேயத் தேர் ஓட...
அகிம்சையெனும்
போதி மரத்தின் கீழ்
ஆண்டுக்கணக்காய்
அமைதி வேண்டி
அமர்ந்திருக்கும்...
எங்கள்
கவலை தவம் களைத்து
ஒற்றுமை வரமளிக்கச்
சித்திரையே மலர்ந்திடு...

*மனிதன் வாழ...
விலங்கு வாழ...
இயற்கை
செயற்கை வாழ...
கட்டணமற்ற
தன்னலமற்ற
தங்கும் விடுதி தந்த...
பூமியெனும் சத்திரமே
பூரிக்கும் அளவிற்கு
விசித்திரங்கள் புரிய
சித்திரையே மலர்ந்திடு...

*புத்தியற்றோர்
சித்தி பெற...
முத்தி பெற...

* யுகம்
யுத்தம் விடுத்து...
யுக்தி பெற
யுக்தி பெறும்
சக்தி தரச்
சித்திரையே மலர்ந்திடு...

* துன்ப இரவின்
நித்திரை சுட்டு
இன்ப ஒளி
முத்திரையிட...
சித்திரையே மலர்ந்திடு
சித்திரமாய் மலர்ந்திடு!

2 comments:

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!