Monday, May 11, 2009

என்னுள்ளே .... என்னுள்ளே

ஒரு கோடையில்
பரிசளித்தாய் நீ
காதலென்னும் பிராணியை

நீயே கூட மறந்திருக்கலாம்..
நான் கனவுகளும் கற்பனைகளும்
ஊட்டி வளர்க்கிறேன் அதை

ஒரு விநாடி கூட........
அங்கு இங்கு நகராத
உன்மத்தம் பிடித்தது அது
எந்நேரமும்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கும்

செல்லக் கோபங்களையும்
அழகிய சிணுங்கல்களையும்
அதிகம் உடையது அது......

தொலை தூரத்தில்
தொலைத்து விட்டு வந்தாலும்
மீண்டும் வாசல் வந்து
மடிமேல் அமரும் அதை
கொஞ்சாமல் என்ன செய்வது?

நடு இரவுகளில்
நானாக உறக்கம் மறந்து
அதன் தலை கோதும் போதும்
பழி சுமத்திவிடுகிறேன்
அதுதான் கலைத்ததென

வளர்ப்பதே தெரியாமல்
மூடி மறைப்பதுதான்
எனக்கிருக்கும் சிக்கல்

இறங்கி வைக்க இயலாத
வாழ்நாள் கர்ப்பம் இது
சுமை மாற்றிக் கொள்ளமுடியாது
உன்னிடம் கூட...........


1 comments:

said...

சூப்பர் கவிதை! ஆனா எனக்கு தான் கவிதை மொழியே புரியாதே! இருப்பா 4 பேருக்கு இந்த லிங் அனுப்பறேன்!